பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல் குற்றவாளிகளுக்கு செவ்வாயன்று வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேரையும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் மீது கடந்த மே மாதம் 24 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த குற்றப்பத்திரிக்கையின் நகல் குற்றவாளிகள் தரப்பிற்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு உள்ளதால் , வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்களை அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.