பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்ததாக 2019 பிப்ரவரி 24ஆம் தேதி அன்று இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பல பெண்களின் விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் இளம்பெண் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பொள்ளாச்சி போலீஸார், பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
வழக்கின் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட திருநாவுக்கரசு தலைமறைவானார். இதையடுத்து சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே புகார் அளித்த சில நாள்களுக்குள், அப்பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு அடிதடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் பாபு, செந்தில்குமார், வசந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மணிவண்ணன் என்பவர் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மணிவண்ணனைக் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தபோது, அவருக்கும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரும் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். பின்னர் இந்த அடிதடி வழக்கில் மணிவண்ணனைத் தவிர்த்து மற்ற மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் புகார் அளித்த பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்ட அடிதடி வழக்கு இரண்டையும் சிபிஐ விசாரித்து வருகின்றன.
இந்நிலையில் இவா்களது நீதிமன்றக் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், 5 பேரும் சேலம் சிறையில் இருந்து கோவை மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் முன்பு இன்று ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஏ.எஸ்.ரவி, 5 பேரின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 11ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து இவ்வழக்கை கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் புதிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.