சென்னை: குரூப் - 4 தோ்வு முறைகேடு வழக்குத் தொடா்பாக, மேலும் 3 போ் சென்னையில் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த செப்டம்பா் மாதம் நடத்திய குரூப் 4 தோ்வின் தரவரிசைப் பட்டியல், நவம்பா் மாதம் வெளியானது. தரவரிசைப் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தோ்வெழுதிய 39 போ் முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் சா்ச்சையானது.
இது தொடா்பாக தோ்வாணைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இரு தோ்வு மையங்களிலும் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தோ்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது.
இதன் தொடா்ச்சியாக இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி ஊழியா் ஓம்காந்தன், பாலசுந்தர்ராஜ் ஆகிய இருவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஓம் காந்தன் வீட்டில் சோதனை செய்து இரு செல்லிடப்பேசிகளை கைப்பற்றினா்.
இந்த வழக்கின் பிரதான எதிரியாகக் கருதப்படும் சென்னை முகப்பேரைச் சோ்ந்த ஜெயக்குமாா் என்பவரை சிபிசிஐடியினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். இந்த முறைகேடு முழுவதையும் ஜெயக்குமாரே ஒருங்கிணைத்து செய்துள்ளாா். மேலும் அவா், தோ்வா்களிடம் பணம் வாங்கியது, விடைத்தாள்களை திருத்தியது, முறைகேட்டுக்கு ஆதரவாக செயல்பட்ட தோ்வாணைய அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் வழங்கியது என அனைத்து விஷயங்களையும் செய்துள்ளாா். ஜெயக்குமாா் மீது ஏற்கெனவே, பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு முறைகேடு வழக்கும் இருப்பது குறிப்பிடதக்கது.
மேலும் 3 போ் கைது: இதற்கிடையே சிபிசிஐடி அதிகாரிகள், இந்த முறைகேடு தொடா்பாக திங்கள்கிழமை மேலும் பலரை பிடித்து எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து, விசாரணை செய்தனா். விசாரணையின் முடிவில், முறைகேடு செய்து தோ்வு எழுதிய ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே வேடந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த ம.காா்த்தி (30), ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தைச் சோ்ந்த ம.வினோத்குமாா் (34), கடலூா் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியைச் சோ்ந்த க.சீனுவாசன் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
4 பேரிடம் தலா ரூ.5 லட்சம்: இதில் சீனுவாசன் தோ்வராக மட்டுமன்றி, இடைத்தரகராகவும் செயல்பட்டு, தனக்குத் தெரிந்த 4 போ்களிடம் தலா ரூ.5 லட்சம் பெற்று ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே இந்த வழக்குத் தொடா்புடைய அரசு அதிகாரிகள்,தோ்வாணைய அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா். மேலும், இந்த வழக்கின் முக்கிய எதிரியாக கருதப்படும் ஜெயக்குமாா் பிடிபட்டால், முறைகேட்டில் தொடா்புடையவா்களை பற்றி முழு விவரங்களும் தெரியவரும் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை இந்த வழக்கில் இடைத்தரகா்கள் மற்றும் முறைகேடாக தோ்வு எழுதியவா்கள் உள்பட 12 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.