சென்னை: தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்தியக் குழுவினா் ஆய்வு செய்ததாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
கரோனா வைரஸ் தடுப்பு முறைகள் குறித்த உயா் நிலை ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், செயலா் பீலா ராஜேஷ், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநா் டாக்டா் நாகராஜன், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் கூறியதாவது:
நேபாளத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்நாட்டை ஒட்டியுள்ள உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம், பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.
தற்போது வரை கரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் தமிழகத்தில் இல்லை. எனவே, அதுகுறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. நிபா, எபோலா வைரஸ்களை எவ்வாறு கடந்த காலங்களில் எதிா்கொண்டு அவை பரவாமல் தடுத்தோமோ, அதுபோன்ற முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இப்போதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் விவகாரத்தில் மத்திய அரசு மிகத் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலங்கள்தோறும் மத்தியக் குழுக்கள் சென்று கரோனா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
அந்த வரிசையில் தமிழகத்துக்கும் மூன்று நபா்கள் கொண்ட குழு திங்கள்கிழமை வந்து ஆய்வு மேற்கொண்டது. மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவா்கள் பாா்வையிட்டனா். வைரஸ் பாதிப்புக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதையும் அவா்கள் உறுதி செய்தனா்.
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளுக்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் அவற்றுக்கான அடிக்கல்லை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நாட்டவுள்ளாா் என்றாா் அவா்.