தமிழ்நாடு

ஏழு பேரின் விடுதலைக்கான ஒப்புதலைத் தாமதமின்றிப் பெற்றிட வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

23rd Jan 2020 09:52 PM

ADVERTISEMENT

 

சென்னை: ஏழு பேரின் விடுதலைக்கான ஒப்புதலைத் தாமதமின்றிப் பெற்றிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அரசியல் சட்டப் பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்துப் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது” வரவேற்கத்தக்கது. 29 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரின் விடுதலையில் புதிய திருப்பமாக உச்சநீதிமன்றமே தலையிட்டிருப்பதால், ஆக்கபூர்வமான விளைவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை மனதில் தோன்றி  மகிழ்ச்சி தருகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏழு பேர் விடுதலை குறித்து நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய பா.ஜ.க. அரசு மதிக்கவில்லை. பிறகு தற்போது ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது 15 மாதங்களுக்கு மேல் தமிழக ஆளுநர் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பது அரசியல் சட்டத்திற்கும் விரோதமானது; ஆரோக்கியமான ஆளுநர் -  அமைச்சரவை உறவிற்கும் எதிரானது.

“நீட்” தேர்வு விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதா குறித்தே விளக்கம் கேட்போம் என்று சட்டமன்றத்தில் அறிவித்து தமிழக மக்களை ஏமாற்றிய முதலமைச்சர், தன் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பவோ அல்லது ஆளுநரைச் சந்தித்து தீர்மானத்திற்கு ஒப்புதல் பெறவோ இதுவரை முன்வரவில்லை.

இந்தச் சூழ்நிலையில், உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவை தக்கபடி பயன்படுத்திக் கொண்டு, அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம், அதனை ஆளுநர் எத்தனை மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார், ஆளுநர் அலுவலகத்திற்கு இந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி அமைச்சரவை எடுத்த தொடர் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முழு விவரங்களையும் உச்சநீதிமன்றத்திற்குத் தாமதமின்றி தெரிவித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவினை மேற்கோள் காட்டித் தமிழக ஆளுநர் அவர்களை உடனடியாக நேரில் சந்தித்து,  இந்த ஏழு பேரின் விடுதலைக்கான ஒப்புதலைத் தாமதமின்றிப் பெற்றிட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT