தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: இருவர் கைது

23rd Jan 2020 05:50 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை இரவு கொழும்புவிலிருந்து ஏர் இண்டியா விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ஹூசைத் (27) மற்றும் சந்திரகுமார் (23) ஆகிய இருவரையும், விமான நிலைய வெளியேறும் பகுதியில் சுங்கத் துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது, இவர்களது பேண்ட் பைகளிலிருந்து ரூ.39.12 லட்சம் மதிப்புள்ள 948 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய தங்கத்தால் ஆன 5 கச்சா தங்க மோதிரங்களும், 4 கச்சா தங்கச் சங்கிலிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே நாளன்று இரவில், துபாயிலிருந்து வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த மாதவன் (21) என்பவரிடமும், விமான நிலைய வெளியேறும் பகுதியில் சோதனையிடப்பட்டது. அதில் அவரது பைகளில் இருந்து ரூ.16.43 லட்சம் மதிப்புள்ள 398 கிராம் எடையுள்ள நீளமான இரண்டு தங்கக் கம்பிகள், அவரது பையின் ஓர மடிப்புகளில் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோன்று புதன் கிழமையன்று கிடைத்த தகவலின் பேரில், பாங்காக்கில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த சுப்ரீத் சிங் (34) மற்றும் தமன்ப்ரீத் சிங் ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களது தலைப்பாகைகளுக்குள் இரண்டு பவுச்களில் பசை வடிவிலான தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், அவர்களது உள்ளாடைகள் மற்றும் மலக்குடல்களில் மறைத்து கடத்தி வரப்பட்ட 4 பண்டல் பசை வடிவிலான தங்கம் கடத்தி வரப்பட்டதும் கண்டறியப்பட்டது. 

மொத்தத்தில் ரூ.74.20 லட்சம் மதிப்புள்ள 1.8 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மொத்தத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள 3.14 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT