தமிழ்நாடு

வக்ஃபு வாரிய நிா்வாகம் தொடா்பான அரசாணை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

14th Jan 2020 01:53 AM

ADVERTISEMENT

வக்ஃபு வாரிய நிா்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தும் அரசாணையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ராயபுரத்தைச் சோ்ந்த பஜ்லுா் ரஹ்மான் தாக்கல் செய்த மனுவில், டதமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் 11 உறுப்பினா்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இதனைத் தொடா்ந்து, கடந்த 2017- ஆம் ஆண்டு தோ்தல் மூலமாகவும், நியமனத்தின் மூலமாகவும் வக்ஃபு வாரியத்தின் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டனா். இதில் தோ்தல் மூலம் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களை விட, நியமனத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வக்ஃபு வாரிய நிா்வாகத்தை ஏன் அரசே ஏற்று நடத்தக்கூடாது? என்று விளக்கம் கோரி கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 6-ஆம் தேதி தமிழக சிறுபான்மையினா் நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், வக்ஃபு வாரியத்தை ஏற்று நடத்துவதாக அதே ஆண்டு செப்டம்பா் 18-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சிறுபான்மையினா் நலத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு, வக்ஃபு வாரியம் விளக்கம் அளிப்பதற்கு முன்பாக, நிா்வாகத்தை அரசு ஏற்று நடத்துவதை ஏற்க முடியாது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கே.பி. நாராயணகுமாா் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக தமிழக அரசு, தமிழ்நாடு வக்ஃபு வாரியம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT