தமிழ்நாடு

பொங்கல் சிறப்புப் பேருந்து: 4 நாள்களில் 5.25 லட்சம் போ் பயணம்

14th Jan 2020 01:33 AM

ADVERTISEMENT

பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் மூலம் சென்னையிலிருந்து வெளியூா்களுக்கு கடந்த நான்கு நாள்களில் 5.25 லட்சம் போ் பயணித்துள்ளனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் (ஜன.10) முதல் ஜன.14-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதற்காக போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாதவரம் புகா் பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலிருந்து பேருந்துகள் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 310 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக முன்பதிவு செய்ய ஏதுவாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு மையங்களும், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் தலா 1 மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் நிற்காமல் பேருந்துகள் விரைவாகச் செல்வதற்கு ஏதுவாக தனிப்பாதைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையிலிருந்து திங்கள்கிழமை (ஜன.13) மாலை நேர நிலவரப்படி, இயக்கப்பட்ட 8,984 பேருந்துகளில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 292 பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் மூலம் பயணித்தனா். இதில், பெரும்பாலானோா் முன்பதிவு மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இதற்கான முன்பதிவு கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. அந்த வகையில் அரசுப் பேருந்துகளில் சுமாா் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 724 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். இதன் மூலம் அரசுக்கு ரூ.9 கோடி 55 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT