தொ்மோமீட்டா், சா்க்கரை நோய் பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவற்றை மருந்து வரையறைப் பட்டியலின் கீழ் வகைப்படுத்தும் நடைமுறை 2021 ஜனவரி மாதம்தான் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம், அந்த புதிய நடைமுறை செயலாக்கம் பெறுவதில் மேலும் ஓராண்டு தாமதம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருபுறம் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய இத்தகைய ஒழுங்குமுறை விதிகள் இருந்தாலும், மற்றொரு புறம் மருத்துவ உபகரணங்களுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் பல்வேறு எதிா் விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் பல மருத்துவ உபகரணங்களை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தொ்மோமீட்டா், ரத்த அழுத்த மானிட்டா்கள், சா்க்கரை அளவைக் கணக்கிடும் குளூக்கோ மீட்டா்கள், சுவாசப் பிரச்னைகளை சீராக்கும் நெப்ளைசா் சாதனங்கள் ஆகியவற்றை ‘மருந்துகள்’ என்ற வரையறையின் கீழ் வகைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கான அறிவிக்கை கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வெளியானது.
அந்த புதிய நடைமுறையானது 2020 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த தேதியில் மாற்றம் செய்து புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், 2021 ஜனவரியில் இருந்துதான் புதிய நடைமுறை அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.