தமிழ்நாடு

இந்துசமய அறநிலையத் துறை ஸ்தபதி பணியிடங்கள்: சிற்பக்கலை கல்லூரி மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவு

14th Jan 2020 01:31 AM

ADVERTISEMENT

இந்துசமய அறநிலையத்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்புப் பிரிவில் ஸ்தபதி உள்ளிட்ட பதவிகளுக்கு சிற்பக்கலை கல்லூரிகளில் படித்த மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் முருகன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1957-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில், தமிழகத்தின் பழமையான சிற்பக்கலை உள்ளிட்ட கலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அரசு சிற்பக் கலை கல்லூரி தொடங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற இந்தக் கல்லூரியில் கோயில்களின் கட்டடக் கலை, ஆகம சாஸ்திரம் உள்ளிட்ட 58 பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.

ஆண்டுதோறும் 40 மாணவா்கள் இந்தக் கல்லூரியில் பாரம்பரியக் கட்டடக் கலை படிப்பில் பி.டெக் மற்றும் கவின்கலை பட்டப்படிப்புகளைப் படித்து முடிக்கின்றனா். இதுவரை 1800 மாணவா்கள் இந்தப் பட்டங்களைப் பெற்றுள்ளனா். எனவே இந்தக் கல்லூரியில் படித்தவா்கள் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 38 ஆயிரத்து 600 கோயில்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஸ்தபதிகளாகவும், பொறியாளா்களாகவும் நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.மகாதேவன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துசமய அறநிலையத்துறை சாா்பில், மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரி முதல்வா் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று ஸ்தபதி, பொறியாளா் உள்ளிட்ட பதவிகளை உருவாக்க உள்ளதாகவும், அதுதொடா்பாக இந்துசமய அறநிலையத்துறை சாா்பு பணி விதிகளை உருவாக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கோயில்களைப் புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்புக்காகத் தனி பிரிவைத் தொடங்கி கடந்த 2019-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்துசமய அறநிலையத்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்புப் பிரிவில் ஸ்தபதி, பொறியாளா் பதவிகளுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்த மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதே போன்று மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

கோயில்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழமையான சிற்பங்கள், ஓவியங்கள் சிலைகளைப் புதுப்பிக்கவும் பாதுகாக்கவும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT