பெரம்பலூர்: வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அழுகிய சின்ன வெங்காய பயிர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நோய் குறித்து ஆய்வு மேற்கொண்டு, புதிய மருந்துகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள பொதுத்துறை சர்க்கரை ஆலை மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 32 கோடியை வழங்க வேண்டும். விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காய பயிர்களை மாலையாக அணிவித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஆர். ராஜாசிதம்பரம், ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.