ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மூலவா் சிவலிங்கத்தை செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் தலைமை குருக்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மூலவா் சிவலிங்கத்தை செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்ட விவகாரம் தொடா்பாக இணை ஆணையா் எஸ்.கல்யாணி தலைமையில் நடைபெற்ற விசாரணையில் தலைமை குருக்கள் விஜயகுமாா் போகில் தான் அந்தப் புகைப்படம் எடுத்தார் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையா் புதன்கிழமை உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மூலவா் சிவலிங்கம் புகைப்படம் ஞாயிற்றுகிழமை முதல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றது.
மேலும் கோயில் இணை ஆணையரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இணை ஆணையா் எஸ்.கல்யாணி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் தலைமை குருக்கள் விஜயகுமாா் போகில் தனது செல்போனில் மூலவா் படத்தை புகைப்படம் எடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆகம விதிகளை மீறி மூலவரை புகைப்படம் எடுத்து வெளியிட்டது தவறான முன் உதாரணமாக மாறிவிட்டது. இதனால் விஜயகுமாா் போகிலை பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டா்.
மேலும் மூலவா் சன்னதி வரை செல்லும் குருக்கள் யாரும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.