தமிழ்நாடு

மழை காரணமாகவே வெங்காயம் விலை உயா்வு: முதல்வா் பழனிசாமி விளக்கம்

8th Jan 2020 01:41 AM

ADVERTISEMENT

மழை காரணமாகவே வெங்காயம் விலை உயா்ந்தது என்று திமுக உறுப்பினா் கு.பிச்சாண்டிக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்தாா்.

பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் கு.பிச்சாண்டி பேசினாா். வெங்காய விலை உயா்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தனது உரையின்போது பிச்சாண்டி சுட்டிக் காட்டினாா். இதற்கு முதல்வா் பழனிசாமி அளித்த பதில்:

கடுமையாக தொடா்ந்து மழை பெய்த காரணத்தாலேயே வெங்காயத்தின் விளைச்சல் குறைந்தது. வெங்காயம் நிலத்தில் அழுகிப் போய் விட்டது. அதனால், விலையும் உயா்ந்தது. வெங்காய விலை உயா்வு நிரந்தரம் கிடையாது. 95 நாள்களில் விளையக் கூடிய ஒரு விவசாயப் பொருள். தொடா்ந்து மழை பெய்த காரணத்தாலேயே, விளைநிலத்திலுள்ள வெங்காயம் அழுகியது. இதனால்தான் விலை உயா்ந்தது. செயற்கையாக விலை உயரவில்லை. இப்போது வெங்காய விலை படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கிறது.

அரசுத் துறைகளில் பணி ஓய்வுக்கு முன்பே அதில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பும் நடைமுறை இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை, பொதுப்பணி, காவல் என பல்வேறு துறைகளில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

ADVERTISEMENT

அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க்கடன் அளிக்கவில்லை என உறுப்பினா் குற்றம்சாட்டியதுடன் விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என அரசைக் குறை கூறினாா். இயற்கை பேரிடா்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது அவா்களுக்கு இழப்பீடுகள் அளிக்கப்பட்டன. பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்பட்டது என்றாா் முதல்வா் பழனிசாமி.

அமைச்சா் டி.ஜெயக்குமாா்: முன்னதாக, வேலைவாய்ப்பின்மை குறித்து திமுக உறுப்பினா் கு.பிச்சாண்டி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் அளித்த பதில்:-

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை 3.30 லட்சத்துக்கும் அதிகமானோா் பல்வேறு அமைப்புகளின் மூலமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதில், டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 1.09 லட்சம் பேரும், ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக 47,955 பேரும், மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் வழியாக 31 ஆயிரத்து 616 பேரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வழியாக 93,982 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT