தஞ்சாவூர்: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, தஞ்சாவூரில் நான்கு இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பேரணி புறப்பட்டது. காந்திஜி சாலை வழியாகச் சென்ற இப்பேரணி தலைமை அஞ்சலகம் அருகே முடிவடைந்தது. அதே இடத்தில் நடைபெற்ற மறியல் போராட்டம் தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல ரயிலடியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ரயிலை மறிப்பதற்காகச் சென்றனர். இவர்களை ரயில் நிலைய வாயிலில் போலீசார் மறித்து கைது செய்தனர்.
மேலும் தஞ்சாவூர் எல்ஐசி அலுவலகம் முன் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை. பேருந்துகள் ஆட்டோக்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் எப்போதும்போல செயல்பட்டன.