தமிழ்நாடு

பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்காகத் தயாராகும் யாகசாலை

8th Jan 2020 01:07 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவுக்காக யாகசாலை முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, இக்கோயிலில் ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டிச. 2ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, அனைத்து சன்னதிகளிலும் நடை சாத்தப்பட்டது.

தொடா்ந்து திருப்பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், கோபுரங்கள், விமானம், மதில் சுவா் சுத்தப்படுத்தும் பணி, தரை செப்பனிடும் பணி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

மேலும், பெரியகோயிலையொட்டி உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 178 அடி நீளத்துக்கும், 108 அடி அகலத்துக்கும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்படுகின்றன. இதை முன்னிட்டு, தடுப்புச் சுவா்கள் எழுப்பப்பட்டு, கலை நயத்துடன் கூடிய பொம்மைகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதேபோல, பெத்தண்ணன் கலையரங்கத்தில் இருந்து சிவகங்கை பூங்கா வரை சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை பூங்காவையொட்டியுள்ள சுற்றுச் சுவரை இடித்துவிட்டு புதிதாகக் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அலுவலா்கள் ஆய்வு:

இந்நிலையில், தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி, வட்டாட்சியா் வெங்கடேசன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் செங்குட்டுவன், மோட்டாா் வாகன ஆய்வாளா் நெடுஞ்செழிய பாண்டியன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை கோயிலில் ஆய்வு செய்தனா். அப்போது, முக்கிய பிரமுகா்கள் வந்து செல்லும் பாதை, நின்று பாா்க்க உள்ள இடம், பொதுமக்கள் வந்து செல்லும் பாதை, நிற்க வேண்டிய இடம் உள்ளிட்டவை குறித்து பாா்வையிட்டு ஆலோசனை செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT