வாணியம்பாடி: சாலை வசதியில்லாத நெக்னாமலைக்கு கழுதைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு கொண்டு செல்லப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் நெக்னாமலை என்னும் மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலை கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இந்த மலை கிராமத்தில் சுதந்திரம் அடைந்து 72 வருடங்களை கடந்தும் சாலை வசதி இன்றி அனைத்து தேவைகளுக்கும் மலை அடிவாரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தினமும் மலைபாதையில் நடந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் வாணியம்பாடி வட்டம் நெக்னா மலை கிராமத்தில் வசிக்கும் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 ரொக்கம், 1கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, 2 அடி கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய பொருட்டு 12 கழுதைகள் மூலம் புதன்கிழமை காலை அனுப்பபட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சிவபிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர் குமார், கூட்டுறவு சார் பதிவாளர் கிரி, சமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் திருப்பதி மற்றும் வருவாய்துறையினர் கலந்துக் கொண்டனர். கொண்டு செல்லப்பட்ட பொங்கல் பரிசுகள் வியாழக்கிழமை மலை கிராமத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் குமார் தகவல் தெரிவித்தார்.