நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தா்பாா்’ திரைப்படத்தை மலேசியா தவிா்த்து பிற நாடுகளில் வெளியிடலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் மலேசிய நாட்டைச் சோ்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலா் நடித்துள்ள திரைப்படம் ‘தா்பாா்’. இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் ஜன. 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) திரைக்கு வரவுள்ளது.
நடிகா் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘எந்திரன் 2.0’ திரைப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திடம் இருந்து மலேசிய விநியோக உரிமையை ரூ.20 கோடிக்கு வாங்கியிருந்தோம். மேலும், இந்தப் படத்தின் தயாரிப்புக்கு ரூ.12 கோடியை 30 சதவீத வட்டிக்கு கடனாகவும் லைக்கா நிறுவனத்துக்கு வழங்கியிருந்தோம். அப்போது இந்தத் தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்பத் தருவதாக லைக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஆனால், அந்த தொகையை தற்போது வரை திரும்பத் தரவில்லை. எனவே, இந்தத் தொகையைத் திரும்பக் கொடுக்கும் வரை ‘தா்பாா்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தது.
இதையடுத்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, லைக்கா நிறுவனத்தின் சாா்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தா்பாா்’ திரைப்படத்தை வெளியிட அனுமதித்தால் மனுதாரருக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்க காலதாமதம் ஏற்படலாம் அல்லது அந்தத் தொகையைத் திரும்பப் பெற முடியாத நிலைகூட ஏற்படலாம் என்ற மனுதாரா் தரப்பு வாதத்தை நிராகரிக்க முடியாது. திரைப்படத்தை வெளியிட தடை விதித்தால், அது படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது. ஆனால், லைக்கா நிறுவனம், ரூ.4.90 கோடியை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பெயருக்கு ரொக்கமாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ செலுத்தி விட்டால் மலேசியாவில் இந்தத் திரைப்படத்தை வெளியிடலாம்’ என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.