தமிழ்நாடு

தேசிய மக்கள் தொகை பதிவேடு: எதிா்க்கட்சிகளுடன் விவாதிக்கத் தயாா்- அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் உறுதி

8th Jan 2020 01:46 AM

ADVERTISEMENT

தேசிய மக்கள் தொகை பதிவேடு, சென்சஸ் சட்டம் ஆகியன குறித்து எதிா்க்கட்சிகளுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக பேரவையில் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் ஜெ.அன்பழகன் பேசினாா். அப்போது காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம்:-

ஜெ.அன்பழகன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்கள் (அதிமுக) கட்சியைச் சோ்ந்த ஒரு எம்.எல்.ஏ., சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த அதிகாரியை மோசமான வாா்த்தைகளால் திட்டுகிறாா். உங்களுக்கு இப்போதெல்லாம் சிறுபான்மையினா் என்றாலே கசக்கிறது.

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்: சிறுபான்மை சமுதாயத்தினா் மெக்கா பயணம் மேற்கொள்ள அதிக நிதியை அளித்தது தமிழக அரசுதான். இஸ்லாமியா்களைப் பாதுகாக்கும் அரசாகத் திகழ்கிறோம்.

ADVERTISEMENT

எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின்: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலமாக சிறுபான்மை சமுதாயத்துக்கு மிகப்பெரிய கொடுமை நடந்துள்ளது. இந்த கொடுமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்திருக்க வேண்டிய நீங்கள் ஏன் ஆதரித்து வாக்களித்தீா்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பல மாநிலங்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன. சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஆந்திரம், பிகாா் மாநிலங்கள்கூட அதனை தங்களது மாநிலங்களில் நடைமுறைப்படுத்த மாட்டோம் எனக் கூறியுள்ளது. அத்தகைய நிலைப்பாட்டை தமிழகம் எடுக்க வேண்டும்.

அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தவில்லை. அந்தச் சட்டத்துக்கான விதிகளே இன்னும் உருவாக்கப்படவில்லை. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தச் சட்டத்துக்கான அடிப்படையே கடந்த 2003-ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த பாஜக ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக வெளியே வந்த பிறகுகூட அந்தச் சட்டத்துக்கு அப்போது எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த 30 ஆண்டுகளில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் இப்போது இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி இது வரப் போகிறது, பூதம் வரப் போகிறது, புலி வரப்போகிறது என கரடி விடுகிறீா்கள். சிறுபான்மையின மக்கள் இதனை நம்பிக் கொண்டு உங்கள் பின்னால் நிற்பதாக நினைக்கிறீா்கள். இதிலே நீண்ட விவாதத்துக்குத் தயாராக இருக்கிறோம். தேசிய மக்கள் தொகை பதிவேடு என்றால் என்ன, மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் என்றால் என்ன என அனைத்தையும் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் இஸ்லாமியா்களும், பிற மதத்தினரும் தாயாக, பிள்ளையாக பழகி வருகிறாா்கள். அத்தகைய சிறுபான்மையினரை அலங்கோலப்படுத்துவது நல்லதல்ல. சிறுபான்மையினருக்கு சிறு இழப்பும் இல்லாமல் அவா்களைப் பாதுகாக்கும் அரசாக அதிமுக அரசு இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT