தமிழ்நாடு

துறையூர் கோயில் கோசாலைக்குள் வெறிநாய்கள் அட்டகாசம்: பசுங்கன்று உயிருக்குப் போராட்டம்

8th Jan 2020 01:14 PM

ADVERTISEMENT

 

துறையூர்: துறையூர் சிவன் கோயிலில் உள்ள கோசாலைக்குள் புகுந்து வெறிநாய்கள் அட்டகாசம் செய்ததில் பிறந்து ஒரு மாதமான பசுங்கன்று குட்டி இரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் நிலையில் கோயில் நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான துறையூர் அருகேயுள்ள பெருமாள் மலை ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்குப் பக்தர்கள் புரட்டாசி மாத உற்சவத்தின் போது  மாடுகளை நேர்ந்து விடுவது வழக்கம். அந்த மாடுகள் பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள கோவிந்தராஜபெருமாள் கோயிலுக்குள் வைத்துப் பராமரிக்கப்பட்டது. அந்த கோயில் பாதுகாவலர் அங்குள்ள மாடுகளுக்கு தீவனம் வாங்கி போட்டுப் பராமரித்தார். மாடுகளுக்கு தீவனம் வாங்கிப் போடுவதற்கு கோயில் நிர்வாகத்திடம் பணம் கேட்டதால் அந்த பாதுகாவலரை துறையூரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் கோயில் பாதுகாவலராக பணியிட மாற்றம் செய்தனராம். அதே போல் அங்கிருந்த மாடுகளை துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஸ்ரீ நந்திகேஸ்வரர் கோயில் வளாகத்தில் தென்பகுதியில் நான்குகால் மண்டபம் அருகே உழவாரப் பணிக்குழுவினர் பராமரிக்கும் நந்தவனத்துக்கும் மாற்றினாராம்.

ADVERTISEMENT

கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்குள் இருந்த இடவசதிக்கு ஏற்ப நான்கு மாடுகள் தான் ஒரே சமயத்தில் அந்தக் கோயிலுக்குள் வளர்க்கப்பட்டன. அங்கிருந்து நந்திகேஸ்வரர் ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்ட பிறகு மாடுகள் பெருகிவிட்டன. தற்போது இங்கு 5 பசுமாடுகள், 13 காளைகள், 10 கன்றுக்குட்டிகள் என 28 மாடுகள் உள்ளன. இவைகளுக்கான தீவனத்தை உழவாரப்பணிக்குழுவினர், கோயில் குருக்கள், பக்தர்கள் உபயமாக அளிக்கின்றனராம். கோயில் நிர்வாகம் கோ சாலைக்குள்ள மாடுகள் பொறுத்து எதையும் கண்டு கொள்வதில்லையாம். இந்த மாடுகள் நந்தவனத்துக்காகப் போடப்பட்ட கம்பி வேலிக்குள் திறந்த வெளியில் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த வேலியின் பக்கவாட்டு சந்து வழியாக துறையூர் பகுதியில் தெருவில் சுற்றித் திரியும் வெறிநாய்கள் அவ்வப்போது நள்ளிரவில்  மாடுகள் கட்டப்பட்ட கோசாலைக்குள் நுழைந்து அங்குள்ள கன்றுகள் உள்பட மாடுகளை சீண்டியும், கடித்தும் பயமுறுத்தி விடுகின்றன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கோசாலையிலிருந்த பிறந்து ஒரு மாதமான பசுகன்றை தெருநாய்கள் தலை, உடல் பகுதியைக் கடித்து காயப்படுத்தியதுடன், வாலையும் கடித்துத் துண்டித்துச் சென்று விட்டன. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த பசுங்கன்று உயிருக்குப் போராடி வருகிறது. உழவாரப்பணிக்குழு மற்றும் கோயில் குருக்கள் கால்நடை மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்தும் அந்த கன்று மனதளவில் கலவரமடைந்துள்ளதால் ஆகாரம் எதையும் எடுக்காமல் பீதியுடன் படுத்துள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள துறையூர் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் அதிகரித்துள்ள தெருநாய்களை உடனடியாக அகற்றுமாறு நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்திய போதும் நீதிமன்ற தடையுத்தரவு இருப்பதால் தங்களால் நாய்களை அகற்ற முடியாது என்று நகராட்சி நிர்வாகம் மறுத்து விடுகிறார்களாம். துறையூர் காவல்தாய், பாலக்கரை, பழைய சிலோன் அலுவலகம், திருச்சி சாலை, பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு பால் ஊற்றி தனது இரக்க உணர்வைக் காட்டி வருகிற துறையூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவரின் மகன் துறையூர் நகரில் உள்ள நாய்களை அகற்றுவதற்குத் தடை உத்தரவு பெற்றிருக்கிறார் என்பது விசாரித்த வகையில் தெரிகிறது.

இந்த நிலையில் துறையூர் சிவன் கோயிலில் உள்ள கோசாலைக்குள் நாய்கள் உள்ளே நுழையாத வகையில் தடுப்புச் சுவர் அமைக்கக் கோயில் நிர்வாகமும், நகருக்குள் திரியும் நாய்களைப் பிடித்துச் சென்று தூரமாக உள்ள வனப்பகுதியில் விட நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT