திருச்சி: அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து புதன்கிழமை நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் திருச்சி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பவில்லை.
வழக்கம்போல அனைத்து ரயில்களும் திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் சென்று வந்தன. இதேபோல, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம் ஆகியவற்றிலிருந்து மாவட்டத்துக்குள்ளும், வெளி மாவட்டங்களுக்கும் வழக்கம்போல தடையின்றி பேருந்துகள் இயக்கப்பட்டன. சாலைகளிலும் வழக்கம்போல அனைத்து வாகனங்களும் இயங்கின.
வங்கிகள், பிஎஸ்என்எல் அலுவலகம், தபால் அலுவலகம், வருவமான வரித்துறை அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்களும், பொதுத் துறை நிறுவனங்களும் குறைந்த அளவு பணியாளர்களுடன் வழக்கம்போல செயல்பட்டன.
திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம், தெப்பக்குளம் பகுதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் மற்றும் வங்கிகள் முன்பாக தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தின் முன்னெச்சரிக்கையாக மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.