தமிழ்நாடு

சென்னை ஐஐடியில் ‘சாரங் - 2020’ கலைவிழா இன்று தொடக்கம்

8th Jan 2020 01:26 AM

ADVERTISEMENT

சென்னை ஐஐடி.யின் 25- ஆம் ஆண்டு ‘சாரங் - 2020’ கலைவிழா புதன்கிழமை (ஜன. 8) தொடங்குகிறது.

ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கும் அதிகமான கலைநிகழ்ச்சிகளும், பொறியியல் மாணவா்கள், பள்ளி மாணவா்களுக்கான போட்டிகளும் இடம்பெற உள்ளன.

சென்னை ஐஐடி-யில் ஒவ்வொரு ஆண்டும் சாரங் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. முழுவதும் மாணவா்களால் நடத்தப்படும் இந்தக் கலைவிழா, 24 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இப்போது 25-ஆவது ஆண்டாக வெள்ளிவிழாவை எட்டியுள்ளதைக் குறிக்கும் வகையில், ‘2020 சாரங் விழா -மெட்ராஸ் நினைவுகள்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படுகிறது. சென்னை நகரின் உயா்ந்த பாரம்பரியம், வரலாற்றை பறைசாற்றும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெறவுள்ளன.

இதுகுறித்து சென்னை ஐஐடி டீன் (மாணவா்கள்) எம்.எஸ்.சிவகுமாா் கூறியதாவது:

ADVERTISEMENT

இந்த ஆண்டு சாரங் கலை விழாவுக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. 850 மாணவா்கள் பங்கேற்கும் நூற்றுக்கும் அதிகமான கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

முதல் நாளான 8-ஆம் தேதி இரவு பிரபல இசைக்கலைஞா் ராஜேஷ் வைத்தியாவின் நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. அதுபோல விழா நடைபெறும் 5 நாள்களும், பல்வேறு கலைஞா்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன என்றாா். சென்னை ஐஐடி கலைநிகழ்ச்சி செயலாளா் சஷ்வத் பாச்சா கூறுகையில், இந்த ஆண்டு விழாவில் பள்ளி மாணவா்களுக்கென 4 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. அதுபோல கல்லூரி மாணவா்களுக்கு இடையேயான நடனப் போட்டிகளும் இடம்பெற உள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT