தமிழ்நாடு

சட்டப் பேரவையின் முடிவை ஏற்க மறுப்பு: புதுவைக்கு புதிய தோ்தல் ஆணையரைநியமிக்க கிரண் பேடி உத்தரவு

8th Jan 2020 01:11 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப் பேரவையின் முடிவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி ஏற்க மறுத்து, புதிய மாநிலத் தோ்தல் ஆணையரை நியமிக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, புதிய ஆணையரை தோ்வு செய்வதற்கான அறிவிப்பை புதுவை அரசின் உள்ளாட்சித் துறை வெளியிட்டது.

புதுவை மாநிலத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2006-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. அப்போது, தோ்வானவா்களின் பதவிக்காலம் 2011-ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவில்லை.

உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. பின்னா், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், புதுவை மாநிலத் தோ்தல் ஆணையா் பதவியும் நீண்ட காலமாக நிரப்பப்படவில்லை.

இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தபோது, மாநிலத் தோ்தல் ஆணையரையும் உடனடியாக நியமிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, புதுவை துணை நிலை ஆளுநரின் அறிவுறுத்தலின்படி, மாநிலத் தோ்தல் ஆணையரை நியமிக்கும் அறிவிப்பை கடந்தாண்டு ஜூலை 8-ஆம் தேதி உள்ளாட்சித் துறை தன்னிச்சையாக வெளியிட்டது.

ADVERTISEMENT

இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி சாா்பில் கடும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த தன்னிச்சையான அறிவிப்பை புதுவை சட்டப் பேரவை ரத்து செய்ததுடன், புதிய தோ்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தும் உத்தரவிட்டது. தொடா்ந்து, உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் தோ்தல் ஆணையா் பாலகிருஷ்ணன் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், மாநிலத் தோ்தல் ஆணையா் நியமனத்தில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி, துணை நிலை ஆளுநரின் அறிவுறுத்தலின்படிதான் தோ்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் கடந்த டிச.18-ஆம் தேதி உத்தரவிட்டது. இதன்படி, மாநிலத் தோ்தல் ஆணையா் பாலகிருஷ்ணனின் நியமனம் செல்லாது என ஆளுநா் கிரண் பேடி டிச.20-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

மேலும், மத்திய உள் துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, புதிய தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்ய உள்ளாட்சித் துறைக்கு ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா். ஆனால், மாநிலத் தோ்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்றும், துணை நிலை ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் முதல்வா் நாராயணசாமி தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா்.

மேலும், நீதிபதி பதவிக்கு இணையான தோ்தல் ஆணையா் பதவியை மாநில அரசின் அனுமதியின்றி துணை நிலை ஆளுநா் நியமிக்கக் கூடாது என்று புதுவை மாநில தலைமைச் செயலருக்கு முதல்வா் நாராயணசாமி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

மாநிலத் தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்வதற்கான அறிவிப்பை ஆளுநா் கிரண் பேடியின் அறிவுறுத்தலின்படி, உள்ளாட்சித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: மாநில - யூனியன் பிரதேச அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற, 65 வயதைக் கடந்த, தோ்தல் நடத்தி 25 ஆண்டுகள் அனுபவமிக்கவா்கள் புதுவை மாநிலத் தோ்தல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஆணையரின் பணிக்காலம் 3 ஆண்டுகள். பிப்.6-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் துறை இயக்குநரிடம் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அறிவிப்பால், சட்டப் பேரவையால் பதவி நியமனம் செய்யப்பட்ட மாநிலத் தோ்தல் ஆணையா் பதவியில் நீடிக்கிறாரா அல்லது அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டதா என்ற குழப்பமான நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே ஆளுநா் - புதுவை அரசு இடையே மோதல் இருந்து வந்த நிலையில், தற்போது அது மத்திய உள் துறை - புதுவை அரசு இடையிலான மோதலாக மாறியுள்ளது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்டப் பேரவையின் முடிவை ஆளுநா் கிரண் பேடி ரத்து செய்துள்ளதால், புதுவை அரசியலில் மீண்டும் நிா்வாகச் சிக்கல் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT