ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் மறியலில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை, திமிரி வாழைப்பந்தல், செங்கனாவரம், மாம்பாக்கம், தட்டச்சேரி ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும், மோட்டார் வாகன புதிய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், மோட்டார் வாகன காப்பீடு தொகையைக் குறைக்க வேண்டும், கலவை வட்டத்தில் உள்ள தட்டச் சேரி, மேல்நெல்லி ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், ரயில்வே, மின்சாரம், வங்கி, விமான விமான நிலையம், சாலைப் போக்குவரத்தைப் போன்ற பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலவை பேருந்து நிலையம் அருகே மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்க செயலாளர் பி.ரகுபதி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்ளிட்ட 70 பேரை கலவை போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல் ஆற்காடு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட குழு உறுப்பினர் டி.சந்திரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்ளிட்ட 85 பேரை ஆற்காடு நகர போலீசார் கைது செய்தனர்.