விராலிமலை: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் காணாமல் போன சிறுவனை விராலிமலை போலிஸார் புதன்கிழமை மீட்டனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் மகன் மிதின்(2). இவர் கடந்த ஜனவரி 5ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் மிதினை கடத்திச் சென்றுள்ளார்.
இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தை காணாமல் போனது குறித்து அக்கம்பக்கம் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் கிடைக்காத நிலையில் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களுக்கு தகவல் பறிமாற்றம் செய்து போலிஸார் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில் புதன்கிழமை காலை விராலிமலை அருகேயுள்ள பகவான்பட்டியில் சிறுவன் ஒருவனை விட்டு விட்டு தந்தை என்று கூறியவர் வெகுநேரமாக காணவில்லை என்று விராலிமலை போலிஸாருக்கு தகவலளித்தனர்.
நிகழ்விடம் சென்ற போலிஸார் சிறுவனை மீட்டு தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் செவ்வாய்க்கிழமை இரவு பகவான்பட்டிக்கு சிறுவனுடன் வந்தவன் தனக்கும் தன் மனைவிக்கும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு மிதினை தூக்கி கொண்டு வந்துவிட்டதாக கூறியுள்ளான். இரவு வெகு நேரமானதால் காலையில் விசாரித்து கொள்ளலாம் என்று நினைத்த அப்பகுதியில் உள்ளவர்கள் இரவு முருகன் என்பவரது வீட்டில் தங்கவைத்துள்ளனர். காலை எழுந்த அவன் குழந்தைக்கு பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவன் திரும்பவில்லை என்று கூறியதை தொடர்ந்து போலிஸார் மிதின் பெற்றோருக்கு தகவலளித்துள்ளனர். தற்போது மிதின் விராலிமலை காவல் நிலையத்தில் பத்திரமாக உள்ளான்.