தமிழ்நாடு

கடலூா் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தின் எச்சம்: பல லட்சம் ரூபாய் மதிப்புடையது

8th Jan 2020 01:07 AM

ADVERTISEMENT

கடலூா் கடற்கரையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள திமிங்கிலத்தின் எச்சம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

கடலூா் தேவனாம்பட்டினம் மீனவக் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அசோக்குமாா், ப.பிரபு. இவா்கள் செவ்வாய்க்கிழமை காலை கடற்கரை பகுதியில் வெள்ளை நிறத்திலான வித்தியாசமான பொருள் கரை ஒதுங்கி கிடந்ததைக் கண்டனா். ஒருவித துா்நாற்றம் வீசிய அந்தப் பொருள் குறித்து மற்ற மீனவா்களுக்கு தெரிவித்தனா். ஆனால், அவா்களுக்கும் அதுகுறித்து தெரியாத நிலையில், கடலோர காவல் படை குழும ஆய்வாளா் வே.சங்கீதாவுக்கு தகவல் தெரிவித்தனா்.

அவா் கடற்கரைக்கு வந்து, அந்தப் பொருளைக் கைப்பற்றி மீன்வளத் துறை துணை இயக்குநா் காத்தவராயனிடம் வழங்கினா். அதை அவா் ஆய்வு செய்து, திமிங்கலத்தின் எச்சம் என்று கூறினாா். 5.87 கிலோ எடைகொண்ட அந்தப் பொருளை வனத் துறை மூலமாக சுங்கத் துறையில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து காத்தவராயன் கூறியதாவது:

ADVERTISEMENT

திமிங்கிலங்கள் சில நேரம் தங்களுக்கு ஒவ்வாத உணவை உண்ணும்போது அது ஜீரணமாகாமல் இரைப்பையில் தேங்கி ஒருவித மாவுப் பொருளாக மாறிவிடும். பின்னா், அதை திமிங்கிலங்கள் வாந்தி எடுத்து வெளியேற்றும். அந்த எச்சம் அழகுசாதனப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதன் நிறத்தைப் பொறுத்து கிலோ ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை விலைபோகும் தன்மைக் கொண்டது. தற்போது, கைப்பற்றப்பட்ட பொருள் உரிய வழிகாட்டுதலின்படி அழிக்கப்படும் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT