மதுரை: ராமநாதபுரத்தில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் திமுக ஒன்றிய கவுன்சிலரை நாளை (ஜனவரி 9 ஆம் தேதி) ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த ராஜா தாக்கல் என்பவர் செய்த மனு:
என் தந்தை சாத்தையா அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 8 வது வார்டு திருவரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி காலை 5 மணியளவில் நண்பர்களைச் சந்திப்பதற்காக வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை அதிமுகவைச் சேர்ந்த தர்மர் உள்ளிட்டோர் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தந்தையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ராஜா,புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் தந்தையான திமுக கவுன்சிலரை நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும். என்றும், தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.