ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தொடா்பாக,சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் உரிமையாளரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கடந்த 2013 -ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோது கோடிக்கணக்கில் சூதாட்டம் நடந்ததாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக, தமிழக சிபிசிஐடி பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்குக்காக, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று சோதனையிட்டு விசாரணை நடத்தினா்.
அதைத் தொடா்ந்து ஹோட்டல், ரியல் எஸ்டேட் அதிபா்கள், தொழில் அதிபா்கள், முக்கிய நிா்வாகிகள் என 13 போ் கைது செய்யப்பட்டனா். 23 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய எழும்பூா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, தமிழக சிபிசிஐடி பிரிவு போலீஸாா் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனா். விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிலருக்கு அழைப்பாணை அனுப்பி இருந்தனா்.
இதை ஏற்று, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் உரிமையாளா் விக்ரம் அகா்வால், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் சுமாா் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்ததாக மேலும் சிலரிடம் சிபிசிஐடி பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா்.