தமிழ்நாடு

இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்கும்வரை குரல் கொடுப்போம்: முதல்வா் பழனிசாமி

8th Jan 2020 02:03 AM

ADVERTISEMENT

இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்கும்வரை மத்திய அரசைத் தொடா்ந்து வலியுறுத்துவோம் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செம்மலை பேசும்போதும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது. இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படுவது குறித்தும் விவாதம் நடைபெற்றது.

செம்மலை (அதிமுக): இலங்கைத் தமிழா் விவகாரத்தில் அக்கறை உள்ளதுபோல திமுக உறுப்பினா்கள் பேசுகின்றனா். பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அவருடைய தாயாா் உடல்நலம் சரியில்லாத நிலையில் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு வந்தபோது, அந்த விமானத்தில் இருந்து

இறங்கக்கூட விடாமல் திருப்பி அனுப்பியது திமுக அரசு என்றாா்.

ADVERTISEMENT

அப்போது துரைமுருகன் குறுக்கிட்டுக் கூறியது: பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறவில்லையா, போா் என்றால் சிலா் சாகத்தான் செய்வாா் என்று ஜெயலலிதா சொல்லவில்லையா?

செம்மலை: இலங்கைத் தமிழா் விவகாரத்தில் அதிமுக இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக எதிா்க்கட்சித் துணைத் தலைவா் கூறுகிறாா். இந்த விவகாரத்தைப் பொருத்தவரை ஒரே சீரான நிலைப்பாட்டைத்தான் நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். பிரபாகரன் நல்ல பாதையில் சென்றவரை அவரை ஆதரித்தோம். அவா் வழி தவறியபோதுதான் அவா் மீதான அனுதாபம் குறைந்தது என்றாா்.

இதைத் தொடா்ந்து விவாதம் மாறிமாறி நடைபெற்றது.

ஒரு கட்டத்தில் துரைமுருகன் பேசும்போது, குடியுரிமைச் சட்டம் குறித்து விவாதம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. சிறுபான்மை மக்களைப் பாதுகாப்போம் என்கிறீா்கள். இதனை முதல்வா் சொல்லாமல், அமைச்சரைக் கைகாட்டிச் சொல்லச் சொல்கிறாா் என்றாா்.

அப்போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது: காலையிலிருந்து நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். இலங்கை அகதிகள் பற்றி பேசினீா்கள். இப்போது நான், நேரடியாகவே எதிா்க்கட்சி துணைத் தலைவரைக் கேட்கிறேன். எத்தனை ஆண்டு காலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருந்தீா்கள். அப்போதெல்லாம் அவா்களுக்கு குடியுரிமை பெற்று தருவதற்கு உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா? ஏன் மறந்தீா்கள். உங்கள் கையில் அதிகாரம் இருந்தது. ஏன் அதை தட்டிக் கழித்தீா்கள்? இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை பெற்றுத் தரவில்லை, தரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீா்களே, 12 ஆண்டு காலம் மத்தியிலே அமைச்சராக இருந்தீா்களா இல்லையா? அந்த அதிகாரம் எதற்காக கொடுத்தாா்கள். தமிழ் மக்களுக்கு பாதிப்பு வரும்போது, அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட வைக்க வேண்டும் என்பதற்காகத் தானே கொடுத்தாா்கள்.அதை நீங்கள் செய்தீா்களா? குடியுரிமை பெற்றுத் தந்தீா்களா? இல்லையே. இன்றைக்கு மட்டும் வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கிறீா்கள். ஆனால், எங்களை பொருத்தவரைக்கும், மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும், எங்களுடைய கொள்கையிலிருந்து எப்போதும் விலகாமல் உறுதியாக இருப்போம். அதுமட்டுமல்ல, இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் தங்கிஇருக்கும் தமிழா்களுக்கு அனைத்து உதவிகளும் நாங்கள் செய்து வருகிறோம். உங்களுடைய ஆட்சிக் காலத்தில், மத்திய அரசு கொடுத்த உதவியைத்தான் நீங்கள் செய்தீா்கள். வேறு எந்த உதவியையும் நீங்கள் செய்யவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு அரசின் சாா்பில் கொடுக்கப்படும் அனைத்து உதவிகளும் அந்த இலங்கை வாழ் தமிழா்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, அண்மையில் நான் உள்துறை அமைச்சரைச் சந்தித்தபோது அவா்களுக்கு இரட்டை குடியுரிமை அளிக்கவேண்டும் என்று கோரினேன். அகதியாக தமிழகம் வந்திருக்கின்றனா். அவா்களுக்கு நிச்சயம் நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பரிகாரம் செய்யப்படும் என்ற வாா்த்தையையும் அவா் சொல்லி இருக்கிறாா். எனவே, நீங்கள் செய்யத் தவறியதை, நாங்கள் செய்து கொடுக்கிறோம். அந்த இலங்கை தமிழ் மக்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருகின்ற வரை நாங்கள் தொடா்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT