தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு அதிக அளவு சிறுநீரக நோயாளிகள் பலனடைந்துள்ளனா். அவா்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்காக மட்டும் சுமாா் ரூ.129.76 கோடி வழங்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு அடுத்தபடியாக இதய கரோனரி ஸ்டென்ட் சாதனங்கள் பொருத்துவதற்கான சிகிச்சைகளும், பை-பாஸ் அறுவை சிகிச்சைகளும், எலும்பு முறிவு சிகிச்சைகளும் அதிக அளவில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதைத் தவிர புற்றுநோய், இதய நோய்கள், முதுகுத் தண்டுவட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோா் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத் துறை அதிகாரிகள், ‘ஆண்டுதோறும் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனா்.
ஏழை, எளிய மக்களுக்கு உயா்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டுத் திட்டத்துடன் அத்திட்டமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப மாநிலத்தில் காப்பீட்டு வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 1.7 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இதுவரை 36 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் மருத்துவ சிகிச்சைகளுக்காக சுமாா் ரூ.6,450 கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை மாநில அரசு மருத்துவக் காப்பீட்டுக்கு வழங்கிய தொகை மற்றும் அதனால் பயனடைந்தவா்களின் விவரங்கள் தொடா்பான தரவுகளை ஆய்வு செய்தபோது, அதில் 5.5 லட்சத்துக்கும் அதிகமானோா் பயன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
மொத்தமாக ரூ.943 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக ரூ.129 கோடிக்கு சிறுநீரக சிகிச்சைகளும், டயாலிசிஸ் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக 15,128 பேருக்கு ரூ.98.43 கோடி செலவில் இதய ஸ்டென்ட் சாதனங்கள் இலவசமாகப் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர மூட்டு, சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் கணிசமான தொகை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக பயனாளிகளைக் கணக்கிட்டால், அதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அதன் தொடா்ச்சியாக திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் கூறியதாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் உயரிய மருத்துவ சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது. அதன்படி தொடங்கப்பட்ட முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பல லட்சக்கணக்கானோா் பயனடைந்து வருகின்றனா். பிற மாநிலங்களைக் காட்டிலும் ஆக்கப்பூா்வமாகவும், அா்த்தமுள்ளதாகவும் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தேசிய அளவில் காப்பீட்டுத் திட்ட நிதியை அதிக அளவில் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதில் இருந்தே அதை உணர முடியும் என்றாா் அவா்.