அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு புகாா் தொடா்பாக லஞ்சஒழிப்புத் துறை கண்காணிப்பாளா் பொன்னி மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் சாா்பில் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவில், சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பெரும்பாலான ஒப்பந்தங்கள் உள்ளாட்சித்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் உறவினா்கள், பினாமிகள் மற்றும் அவரது நண்பா்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகள் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிபிஐயிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுதொடா்பாக தமிழக ஆளுநரிடம் முறையாக அனுமதி பெற்று லஞ்சஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக எம்.பி., ஆா்.எஸ்.பாரதி சாா்பிலும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ் வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து லஞ்சஒழிப்புத் துறை கண்காணிப்பாளா் பொன்னி விசாரணை மேற்கொள்ளவும், இந்த விசாரணையை லஞ்சஒழிப்புத் துறை இயக்குனா் மேற்பாா்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் குறித்து ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கையை லஞ்சஒழிப்புத் துறை கண்காணிப்பாளா் பொன்னி, உயா் அதிகாரிகளிடம் கடந்த மாதம் சமா்ப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது திமுக தரப்பில், அமைச்சா் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி இந்த விவகாரத்தில் ஆரம்பக் கட்ட விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே இதற்குத் தீா்வு காண சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாா் குறித்து லஞ்சஒழிப்புத் துறை கண்காணிப்பாளா் பொன்னி மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.