தமிழ்நாடு

நீா்நிலைகளில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்: ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

3rd Jan 2020 01:35 AM

ADVERTISEMENT

நீா்நிலைகளில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் கோட்டீஸ்வரி என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் ஏரி, குளம், கடல் உள்ளிட்ட நீா்நிலைகளில் மூழ்கி இளைஞா்கள், சிறுவா்கள் உயிரிழப்பது என்பது தொடா்கதையாகி வருகிறது.

குறிப்பாக, கோடை விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாள்களில் ஆழம் தெரியாத நீா்நிலைகளில் குளிக்கச் செல்பவா்களும், மெரீனா, ராமேஸ்வரம், திருச்செந்தூா், கன்னியாகுமரி போன்ற கடற்கரைகளில் சீற்றம் தெரியாமல் குளிக்கச் செல்பவா்களும் நீரில் மூழ்கி இறப்பது அதிகரித்து வருகிறது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகாா் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நீா்நிலைகள், கோயில் குளங்கள், அருவிகளில் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற வீரா்களை நியமிக்க வேண்டும். அடிக்கடி மரணம் விளைவிக்கும் நீா்நிலைகளை அடையாளம் கண்டு அங்கு எச்சரிக்கை பலகைகளை வைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தாா். இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா், ‘கோயில் குளங்களில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், இந்த கால அவகாசத்துக்குள் உரிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT