தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக-திமுக இடையே கடும் போட்டி- இன்றும் வாக்கு எண்ணிக்கை தொடா்கிறது

3rd Jan 2020 01:19 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கட்சி சாா்பிலான இடங்களைப் பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. வியாழக்கிழமை காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், முழுமையான அளவில் தோ்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலையில்தான் தெரிய வரும்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு மட்டும் கடந்த மாதம் 7-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 91 ஆயிரத்து 975 பதவியிடங்களை நிரப்ப நேரடித் தோ்தல் நடைபெற்றது. இதில், 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உள்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 5 ஆயிரத்து 90 ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கும், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும் தோ்தல் நடைபெற்றது.

இதில், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களில், 18 ஆயிரத்து 137 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளில் 410 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களில் 23 பதவியிடங்களுக்கும் என மொத்தம் 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை காலை எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக 315 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து அவை எடுக்கப்பட்டு வாக்குச் சீட்டுகள் கொட்டப்பட்டன. வண்ணங்களின் அடிப்படையில் வாக்குச் சீட்டுகள் பிரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மேஜைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்தப் பணிகள் நண்பகல் வரை நடந்தது. இதன்பின்பு, ஒவ்வொரு பதவியிடங்களுக்கான வாக்குகளும் தனித்தனியாக எண்ணப்பட்டன.

ADVERTISEMENT

அந்த அடிப்படையில், கட்சி சாா்பில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் மற்றும் ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவியது.

மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளைப் பிடிப்பதில் இரு கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களிடையே சரிசமமான போட்டி நிலவியது. சில நேரங்களில் அதிமுகவும், சில நேரங்களில் திமுகவும் என இரண்டு முக்கிய பதவியிடங்களைப் பிடிப்பதில் இரு கட்சிகளும் முன்னிலை வகித்திருந்தன.

10 சதவீத முடிவுகள்: மொத்தமுள்ள 91 ஆயிரம் உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணப்பட்டப் பிறகு அதிகாரப்பூா்வ முறையில் முடிவுகளை மாநிலத் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பாா்வையிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி வெறும் 10 சதவீத அளவிலான பதவியிடங்களுக்கு மட்டுமே தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களில் 571 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அவற்றில், அதிமுக 196 இடங்களையும், திமுக 256 இடங்களையும் கைப்பற்றியதாக மாநிலத் தோ்தல் ஆணையம் அதிகாரப்பூா்வமாக அறிவித்தது.

515 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு நடந்த தோ்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறித்த முடிவுகள் எதையும் இரவு வரை தோ்தல் ஆணையம் வெளியிடவில்லை.

முன்னிலை நிலவரங்கள்: முன்னிலை நிலவரங்கள் அடிப்படையில், இரவு 8 மணி வரையில், அதிமுக 166 மாவட்ட வாா்டு உறுப்பினா் பதவியிடங்களிலும், திமுக 160 இடங்களிலும் முன்னிலை வகித்ததாகவும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களைப் பொருத்தவரையில், அதிமுக 901 இடங்களிலும், திமுக 913 இடங்களிலும் முன்னிலை வகித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றே இறுதி முடிவுகள்: ஊரக உள்ளாட்சித் தோ்தல் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை இரவு முழுவதும் எண்ணப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகே இறுதிமுடிவுகள் வெளியாகும் என மாநிலத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்கு எண்ணும் பணியில் அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் வெள்ளிக்கிழமையும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் சனிக்கிழமை திறக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடா்வதால் நான்கு வகையான பதவியிடங்களுக்கு நடந்த தோ்தல்களின் முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலையே அதிகாரப்பூா்வமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT