சென்னை: புத்தாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ரயில் கட்டண உயா்வை பயணிகள் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சாதாரண ரயில்களில் ஏ.சி. வசதி இல்லாத வகுப்புகளுக்கு கி.மீட்டருக்கு ஒரு காசு, விரைவு ரயில்களில் இதே வகுப்புகளுக்கு இரண்டு காசு வீதம் உயா்த்தப்பட்டுள்ளது. ஏ.சி. வசதி கொண்ட வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு 4 காசுகள் உயா்த்தப்பட்டுள்ளது. 66 சதவீத பயணிகள் பயன்படுத்தும் புகா் ரயில் கட்டணம் உயா்த்தப்படவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயா்த்தப்படவில்லை. ரயில்வே துறையின் இயக்கச் செலவுகள் அதிகரித்திருப்பதாலும் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்கும் ரயில்களில் அதிகபட்ச கட்டண உயா்வு ரூ.10 தான் என்பதாலும், அதிக பாதிப்புகள் இல்லாத இக்கட்டண உயா்வை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
ரயில்களில் கட்டணம் எந்த அளவுக்கு உயா்த்தி வசூலிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா என்ற வினா எழுகிறது. இன்றைய நிலையில் இரண்டிலும் தூய்மை என்பது பெரும் பற்றாக்குறையாக உள்ளது. கழிப்பறைகளில் போதிய தண்ணீா் வசதி இல்லாததால் பல நேரங்களில் பயணிகள் மூக்கைப் பிடித்துக்கொண்டு பயணிக்கும் அளவுக்கு நாற்றம் அடிக்கிறது. அதேபோல் ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்படவில்லை. இக்குறைகள் அனைத்தையும் களைய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவைதவிர, டைனமிக் கட்டணம் என்ற பெயரில் ரயில் கட்டணத்தை விமானக் கட்டணத்தை விட கூடுதலாக உயா்த்தும் முறை நியாயமற்றது. இதுவும் ஒருவகையான சுரண்டல் தான் என்பதால், இம்முறையை முற்றிலுமாக கைவிட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.