தமிழ்நாடு

ரயில் கட்டணங்களின் உயர்வைத் திரும்பப் பெறவேண்டும்: திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு

2nd Jan 2020 01:52 PM

ADVERTISEMENT

ரயில் கட்டணங்களின் உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
மத்திய அரசு யாரும் எதிர்பாராத நேரத்தில் ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் ஒருமாத காலத்தில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிட உள்ள நிலையில் திடீரென்று ரயில் கட்டணத்தை உயர்த்திருப்பது நிதிநிலை அறிக்கையில் மேலும் பெரிய அளவில் கட்டண உயர்வு இருக்குமோ? என்ற ஐயப்பாட்டை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து மக்கள்மீது பல வகையிலும் நிதிச்சுமையை ஏற்றி வருவது, இந்த அரசு நிதி நிர்வாகத்தில் மிக மோசமாக விளங்குகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

ADVERTISEMENT

ரயில் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தாமலும், தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பல்வேறு ரயில்வே திட்டங்களை நிறைவேற்றாமலும் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணித்து வரும் நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது வேதனைக்குரியதாகும்.

விமானக் கட்டணங்கள்கூட குறைந்து வரும் நிலையில், ரயில் கட்டணங்கள், விமானக் கட்டணங்கள் அளவுக்கு உயர்த்தப்படுவது கண்டனத்துக்குரியதாகும்.

எனவே, மத்திய அரசு சாமானிய மக்கள் பயணத்துக்கு ஏற்றதான ரயில் கட்டணங்களின் உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துவதோடு, நிதிநிலை அறிக்கைக்கு முன் ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT