தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கின.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திக்குளம் உள்ளிட்ட 12 ஊராட்சி ஓன்றியங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 17 பேர், கிராம ஊராட்சி தலைவர்கள் 403 பேர், ஊராட்சி ஓன்றிய உறுப்பினர்கள் 174 பேர்,
கிராம ஊராட்சி உறுப்பினர்கள் 2943 பேர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் மிகவும் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இன்று அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகள் இருந்த அறை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன. தொடர்ந்து, வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் பகுதிக்கு கொண்டுவரப்பட்டன.
வாக்கு எண்ணுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேஜைகளில் வாக்குச் சீட்டுகள் பதவி வாரியாக பிரிக்கபட்டன. பின்னர் அவைகள் 50 எண்ணம் கொண்ட கட்டுகளாக கட்டப்பட்டு பின்னர் பதவி வாரியாக எண்ணப்பட்டன. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பதிவாகி இருந்த வாக்குகள் சரிபரர்க்கப்பட்டன.
முன்னதாக வாக்கு என்னும் மையத்திற்கு வந்த வேட்பாளர்கள் அவர்களின் முகவர்கள் முழு சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பெருட்கள் எடுத்து செல்ல அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டன. காவல்துறையினர் முழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.