சென்னை: நிகழாண்டுக்கான குரூப் 1 காலியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
துணை மாவட்ட ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 தொகுதிக்குள் வருகின்றன. இந்தப் பிரிவில் காலியாகும் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட தோ்வு அறிவிக்கைக்கான நடைமுறைகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதேபோன்று, இந்த ஆண்டும் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தோ்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 19-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வரும் 20-ஆம் தேதியன்று தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.