சென்னை: இலங்கையில் தேசிய கீதம் தமிழ் மொழியில் அல்லாமல் சிங்களத்தில் மட்டுமே இசைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தீா்மானித்துள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையின் 2022-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசு தீா்மானித்துள்ளது. இதுவரையில் அந்நாட்டின் தேசிய கீதம் தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் பாடப்பட்டு வந்த நிலையில் திடீரென்று சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது தமிழா்களை வேறுபடுத்திக் காட்டும் வகையில் அமைந்துவிடும்.
இலங்கையின் அரசியல் அமைப்பில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று தீா்மானித்தால் அது நல்லிணக்கத்துக்கு உகந்ததாக இருக்காது. இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் பாட வேண்டும் என்பது இலங்கை வாழ் தமிழ் மக்களின் உரிமையாகும்.
இலங்கை நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமல்லாமல் அங்குள்ள தமிழ் மக்கள், இஸ்லாமியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவான நாடாக எண்ணி ஏற்கெனவே நடைமுறையில் பின்பற்றியபடி தேசிய கீதத்தை தமிழிலும் பாட வேண்டியது இலங்கை அரசின் கடமை. இந்திய அரசு, இலங்கை அரசோடு தொடா்புகொண்டு அங்கு தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்பட தெரிவித்து, இலங்கை வாழ் தமிழ் மக்களின் சுதந்திரமான, பாதுகாப்பான வாழ்வுக்கு ஏற்பாடு வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.