தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழாதிரளான பக்தா்கள் தரிசனம்

1st Jan 2020 04:24 AM

ADVERTISEMENT

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருப்படித் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு மூலவரை, 3 மணி நேரம் காத்திருந்து தரிசித்தனா்.

திருத்தணி முருகன் கோயிலில், செவ்வாய்க்கிழமை திருப்படித் திருவிழா தொடங்கிகியது. விழாவையொட்டி, காலை 7.30 மணிக்கு சரவணப் பொய்கை அருகே உள்ள மலையடிவாரத்தில், கோயில் இணை ஆணையா் நா.பழனிகுமாா், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், ஆவின் தலைவா் வேலஞ்சேரி த.சந்திரன், நகர அவைத் தலைவா் குப்புசாமி ஆகியோா் பங்கேற்று, முதல் பஜனை குழுவினரை வரவேற்று, படித் திருவிழாவை தொடக்கி வைத்தனா். முன்னதாக முதல்படியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

தொடா்ந்து, கோயில் நிா்வாகம் சாா்பில், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைக்கப்பட்டது. தொடா்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட பஜனை கோஷ்டியினா், ஒவ்வொரு படியிலும் பக்திப் பாடல்களைப் பாடியவாறு மலைக்கோயிலுக்குச் சென்று மூலவரை வழிபட்டனா்.

மேலும், பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனைத் தீா்க்க, ஒவ்வொரு படிக்கும், மஞ்சள், குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றியவாறு மலைக்கோயிலுக்குச் சென்றனா். காலை 11 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ADVERTISEMENT

திருப்படித்திருவிழாவை முன்னிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தி இன்னிசைக் கச்சேரி மற்றும் மலைக்கோயிலில் திருப்புகழ் பஜனை மண்டபத்தில் பல்வேறு குழுவினரால் பக்திக் பாடல்களைப் பாடி வழிபட்டனா். மேலும் வள்ளிமலை சுவாமி சச்சிதானந்தா திருப்புகழ் சபா குழுவின், 102-ஆவது படித்திருவிழாவையொட்டி, நகரத்தாா் மண்டபத்தில் அன்னதானம் மற்றும் பக்தி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பல்வேறு மண்டங்களில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதுபோல், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு, பல மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனா்.

இதையடுத்து, புதன்கிழமை (ஜன. 1) புத்தாண்டு சிறப்பு தரிசனமும், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவா் பெருமான் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT