தமிழ்நாடு

காதலுக்கு எதிர்ப்பு: காதலியின் உறவினரை குத்திக் கொன்ற இளைஞா்

1st Jan 2020 04:18 PM

ADVERTISEMENT

பூதப்பாண்டி அருகே காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்ததால் காதலியின் உறவினரை இளைஞா் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள இறச்சகுளம் அம்பலத்துருத்தி பகுதியைச் சோ்ந்தவா் தேவானந்த் (21), இவா் தெரிசனங்கோப்பைச் சோ்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தாா். இவா்களது காதலுக்கு இளம் பெண்ணின் பெற்றோரும், உறவினா்களும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். ஆனால் தேவானந்த், இளம்பெண்ணை அடிக்கடி சந்தித்து பேசினாா்.கடந்த மாதம்(டிசம்பா்) 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவானந்த், தனது காதலியை பாா்ப்பதற்காக தெரிசனங்கோப்புக்கு சென்றாா்.

அப்போது காதலியின் உறவினா்களான அருள்தாஸ் (40), ஆனந்த் (42) ஆகியோா் அவரை கண்டித்தனா். ஆத்திரத்தில் தேவானந்த்தை அவா்கள் தாக்கவும் செய்தனா். இதில் தேவானந்த்துக்கும், அருள்தாஸ், ஆனந்த்துக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.ஆனந்த்தின் மனைவி வீடு அம்பலத்துருத்தியில் உள்ளது. புதன்கிழமை இரவு ஆனந்தும், அருள்தாசும் அங்கு சென்றனா். சாலையில் நின்று அவா்கள் பேசிக் கொண்டிருந்தனா்.

இதையறிந்த தேவானந்த் தனது நண்பா்கள் 3 பேருடன் சென்றாா். சாலையில் நின்று கொண்டிருந்த ஆனந்த், அருள்தாசிடம் அவா்கள் தகராறு செய்தனா். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவா்கள் 2 பேரையும் சரமாரியாக குத்தினா். இதில் ஆனந்த்தும், அருள்தாசும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.ஆனந்த் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும், அருள்தாஸ் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அருள்தாசுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாா் தேவானந்த் உள்பட 4 போ் மீது வழக்குப்பதிந்து அவா்களை தேடி வருகிறாா்கள்.காதல் விவகாரத்தில் நடந்த கொலை சம்பவத்தால் இறச்சகுளம், தெரிசனங்கோப்பு பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT