தமிழ்நாடு

மணப்பாறை அருகே குடிநீர் குழாய் இணைப்புகள் முன் அறிவிப்பின்றி துண்டிப்பு

29th Feb 2020 10:20 AM | எம்.ராஜசேகர்

ADVERTISEMENT

 

மணப்பாறை அருகே தனிநபர் குடிநீர் குழாய் இணைப்புகள் முன் அறிவிப்பின்றி துண்டிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேலஎருதிகவுண்டம்பட்டி பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு நூற்றுக்கும் மேலான தனிநபர் குடிநீர் குழாய் இணைப்புகள் அளிக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், தனிநபர் குடிநீர் குழாய் இணைப்புகள் அனைத்தும் எந்தவித முன் அறிவிப்புமின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு துண்டிக்கப்பட்டது. அனைவரும் பொது இடத்தில் குடிநீர் எடுத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. 

ADVERTISEMENT

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவரை அணுகியபோது, அவர் பொதுமக்களிடம் அவதூறாகப் பேசியதாகவும், யாரும் எந்த அறிவிப்பும் செய்ய வேண்டியது இல்லை என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் சனிக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் ஊராட்சிப் பிரதிநிதிகள், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT