தமிழ்நாடு

அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனம்-கார் மோதி விபத்து: 3 பேர் பலி, 17 பேர் படுகாயம்

29th Feb 2020 08:58 AM

ADVERTISEMENT

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை காலை டாடா ஏஸ் வாகனத்தின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 17 பேர் படுகாயம் அடைந்தனர்.        

அருப்புக்கோட்டை அருகே தோனுகால் கிராமத்தை அடுத்துள்ள தண்டியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 20 கட்டடத் தொழிலாளர்கள் டாடா ஏஸ் வாகனத்தில் பந்தல்குடியை நோக்கி வேலைக்குச் சென்றனர். அந்த வாகனம் அருப்புக்கோட்டை புறவழிச் சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து இறங்கியபோது, பின்னால் வந்து கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பலமாக மோதி சாலையோரப் பள்ளத்தில் நின்றது. 

ADVERTISEMENT

இதில் டாடா ஏஸ் வாகனம் தலை கீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வாகனத்தில் சிக்கியவர்களில் மாரி (45), பழனியம்மாள் (52), விஜயலஷ்மி (37) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் ஒட்டுநர் உள்ளிட்ட 4 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் உள்பட மொத்தம் 17 பேர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அருப்புக்கோட்டை நகர காவல்துறையினர் காயமடைந்தோரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பலியான 3 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இவ்விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT