தமிழ்நாடு

சென்னை பெசன்ட்நகரில் கடத்தப்பட்ட 8 மாதப் பெண் குழந்தை மீட்பு; ஒருவர் கைது

29th Feb 2020 03:05 PM

ADVERTISEMENT

 

சென்னை பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தை சோ்ந்தவா் பாட்ஷா (27). நரிக்குறவரான இவா், தனது மனைவி சினேகா (22) மற்றும் 8 மாத குழந்தை ராஜேஸ்வரியுடன் பெசன்ட்நகா், எலியட்ஸ் கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வருகிறாா். வியாபாரம் முடிவடைந்த பின்னா், பாட்ஷா தனது குடும்பத்துடன் எலியட்ஸ் கடற்கரையில் படுத்து தூங்குவது வழக்கம்.

இந்நிலையில் பாட்ஷா, வியாழக்கிழமை இரவு குடும்பத்துடன் எலியட்ஸ் கடற்கரையில் படுத்து தூங்கினாா். வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது, தனது அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்த 8 மாத பெண் குழந்தை ராஜேஸ்வரியை காணவில்லை. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சாஸ்திரிநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குழந்தையைத் தேடி வந்தனர். 

ADVERTISEMENT

இதில் கடத்தல் கும்பல் அந்தக் குழந்தையைக் கடத்தியுள்ளதா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்திவந்தனர். இதற்காக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டதில், குழந்தையைக் கடத்திச் சென்ற பெண், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தார்.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தையைக் கடத்தியவர்கள், வேறு நபரிடம் குழந்தையை விட்டுச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT