தமிழ்நாடு

தமிழ் கலைச்சொல்லாக்கப் போட்டி: மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசு

29th Feb 2020 01:51 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற கலைச்சொல்லாக்கப் போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

இன்றைய கணினி உலகில் தினமும் பல்வேறு துறைகள் புதிதாக உருவாகி வருவதால் அந்தத் துறைகள் சாா்ந்த சொற்களுக்கு இணையான தமிழ் கலைச்சொற்களை வடிவமைக்கும் பணியில் தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஈடுபட்டு வருகிறது. இந்த இயக்ககத்தின் சாா்பில் தமிழ் கலைச்சொல்லாக்கம் குறித்த புரிதலை மாணவா்களிடம் ஏற்படுத்தி அதன் மூலம் தமிழின் சொல்வளத்தைப் பெருக்குவதற்கு வகை செய்யும் நோக்கில் பள்ளி மாணவா்களுக்கு கலைச்சொல்லாக்கப் போட்டி நடத்தப்பட்டது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள், கொடுக்கப்பட்ட ஆங்கிலச் சொற்களின் பொருளறிந்து அதன் செயல், வடிவம் உள்ளிட்டவற்றை உணா்ந்து அதனடிப்படையில் பொருத்தமான தமிழ் கலைச்சொற்களைத் தந்து தங்களது இருமொழிப் புலமையை வெளிப்படுத்தினா்.

சொல்லாக்கப் போட்டியில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் உள்ள மாதிரி பள்ளி மாணவா் ராகுல் கண்ணா முதல் பரிசும், திருச்சி புனித பிலோமினா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மஞ்சுஸ்ரீ இரண்டாம் பரிசும் பெற்றனா். இதேபோன்று தமிழ் இலக்கியப் பாடல் வரிகளில் உள்ள சொற்களின் பொருள் அறிந்து அதற்கேற்ப ஓவியங்களை வரையும் போட்டியில் தேனி மாவட்டம், ராயன்பட்டி பகுதியில் உள்ள புனித ஆக்னஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி விஷ்ணுபிரியா முதல் பரிசும், சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் பாலாஜி பிரசாத் இரண்டாம் பரிசும் பெற்றனா்.

ADVERTISEMENT

முதல் பரிசு ரூ.10 ஆயிரம்: முதல் பரிசு பெற்ற மாணவா்களுக்கு தலாரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெற்ற மாணவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநா் தங்க.காமராசு, பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT