தமிழ்நாடு

சுமார் 35 லட்சம் முதியோர் பயன்பெறும் வகையில் ரூ. 4300 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

26th Feb 2020 07:07 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: சுமார் 35 லட்சம் முதியோர் பயன்பெறும் வகையில் நிகழாண்டில் ரூ. 4300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது

தமிழகத்தில் முதியோர் உதவித்  தொகை வழங்குவதற்கு ரூ. 4,300 கோடி இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 35 லட்சம் முதியோர் பயனடைவர். கடந்த திமுக ஆட்சியில் இதற்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ. 1,700 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழக அரசு பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தி வருவதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் குறைந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் 2,800 இடங்கள் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் என்று கடந்த காலங்களில் கண்டறியப்பட்டது. அரசு எடுத்த முயற்சியால் தற்போது அது 900 இடங்களாகக் குறைந்துள்ளது. இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு எப்போதும் தயாராக உள்ளது.

தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிலத்தடி நீர் மட்டம் தற்போது அதிகபட்சமாக 31 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

வருவாய்த்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக விரைவில் நிரப்பப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு குறித்து அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் ஜெயகுமார் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளனர்.

புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றார் உதயகுமார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் மற்றும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT