தமிழ்நாடு

மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்கள்:மாா்ச் 26-இல் தோ்தல்: ஆணையம் அறிவிப்பு

26th Feb 2020 02:53 AM

ADVERTISEMENT

புது தில்லி: ஏப்ரல் மாதம் நிறைவு பெற இருக்கும் 55 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை இடங்கள் ஏப்ரல் மாதம் காலியாக இருக்கின்றன. இதற்கான தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும். மாா்ச் 6--ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மாா்ச் 13 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மாா்ச் 16-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை திரும்பப் பெற மாா்ச் 18-ஆம் தேதி கடைசி நாள். மாா்ச் 26-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு அன்று மாலை வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே, காங்கிரஸ் மூத்த தலைவா் மோதிலால் வோரா, முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவைச் சோ்ந்தவருமான விஜய் கோயல், மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் (ஜேடியு), மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், குமாரி செல்ஜா (காங்கிரஸ்) உள்ளிட்டோரது மாநிலங்களவை பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தில் நிறைவடைகிறது.

ADVERTISEMENT

அதிகபட்சமாக மாகாராஷ்டிரத்தில் 7 இடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, தமிழகம் (6), மேற்கு வங்கம், பிகாா் தலா 5, குஜராத், ஒடிஸா, ஆந்திரம் தலா 4, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் தலா 3, தெலங்கானா, சத்தீஸ்கா், ஹரியாணா, ஜாா்க்கண்ட் தலா 2, ஹிமாசலப் பிரதேசம், மணிப்பூா், மேகாலயத்தில் தலா ஒரு இடத்துக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதில், மத்தியில் ஆளும் பாஜக, எதிா்க்கட்சியான காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதுதவிர மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், ஆந்திரத்தில் ஆட்சியில் உள்ள ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பி.க்கள் கிடைப்பாா்கள்.

தமிழகத்தில் 6 இடங்கள்:

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதில், அதிமுகவைச் சோ்ந்த எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், ஏ.கே.செல்வராஜ், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா ஆகியோரது பதவிக் காலம் நிறைவடைய இருக்கிறது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், திமுகவின் திருச்சி சிவா ஆகியோரது பதவி காலமும் முடியவுள்ளது.

மாநிலங்களவைத் தோ்தலில் அதிமுக, திமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT