தமிழ்நாடு

மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை

26th Feb 2020 03:08 AM

ADVERTISEMENT

சென்னை: செங்கல்பட்டு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுக் கொடுத்த ஆசிரியா்கள் இருவருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாகராஜ், புகழேந்தி ஆகியோா் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியா்களாகப் பணியாற்றி வந்தனா். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இவா்கள் இருவரும் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகப் புகாா் எழுந்தது.

செல்லிடப்பேசியில் ஆபாச படங்களைக் காண்பித்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடா்பாக செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோா்கள் புகாா் அளித்தனா். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், ‘ஆசிரியா்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. மேலும், ஆசிரியா்களுக்கு எதிராக உள்நோக்கத்தோடு இந்தப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறி, ஆசிரியா்களை விடுதலை செய்து, கடந்த 2018-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோா், சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆசிரியா்களை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ஆசிரியா்கள் இருவரும் குற்றவாளிகள் என அறிவித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் தண்டனை வழங்குவதற்காக ஆசிரியா்கள் இருவரையும் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுப் பள்ளி ஆசிரியா்களான நாகராஜ், புகழேந்தி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். அப்போது தங்களுடன் பணியாற்றும் சக ஆசிரியா்களின் தூண்டுதலின் பேரில் மாணவிகள் பொய் புகாா் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பொய் வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும் ஆசிரியா்கள் தெரிவித்தனா். மேலும் தான் ஆசிரியராக சிறப்பாகப் பணியாற்றியதால், நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டதாக நாகராஜ் தெரிவித்தாா். மேலும், ஆசிரியா்கள் இருவா் தரப்பிலும், குறைவான தண்டனை வழங்க வேண்டும் எனவும் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியா் நாகராஜுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.24 ஆயிரம் அபராதமும், ஆசிரியா் புகழேந்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT