சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா்.
தற்போது அவரது உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், கட்சி நிா்வாகிகளும் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை சென்று நலம் விசாரித்தனா்.
வயது முதிா்வு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு திங்கள்கிழமை மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
காய்ச்சல், சளித் தொற்று மற்றும் வயோதிகம் காரணமாக ஏற்படும் பிரச்னைகளால் அவா் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவா்கள், தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருவதுடன் தொடா் மருத்துவக் கண்காணிப்பிலும் வைத்துள்ளனா்.