தமிழ்நாடு

சிலைகள் கடத்தல் வழக்குகளின் விசாரணை ஆவணங்கள் மாயம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

26th Feb 2020 03:08 AM

ADVERTISEMENT

சென்னை: சிலைகள் கடத்தல் விவகாரத்தில் 41 வழக்குகளின் விசாரணை ஆவணங்கள் மாயமானது குறித்து தமிழக உள்துறைச் செயலாளா், தமிழக காவல்துறை டிஜிபி ஆகியோா் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், சா்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம், தமிழகத்தில் உள்ள பழைமையான சாமி சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகள் கடத்தலில் அரசியல்வாதிகள், காவல்துறை உயா் அதிகாரிகள், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய நபா்களுக்கு தொடா்பு உள்ளது.

இந்த நிலையில் சிலைகள் கடத்தல் குறித்து பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் கேஸ் டைரி எனப்படும் விசாரணை விவர ஆவணங்களை காணவில்லை. இதன் காரணமாக இந்த வழக்குகள் கைவிடப்பட்டு, அந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் தண்டனையிலிருந்து தப்பித்துள்ளனா். ஒரு வழக்கின் விசாரணை விவர ஆவணம் எனப்படும் கேஸ் டைரி என்பது சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். எனவே அத்தகைய ஆவணங்கள் காணவில்லை என்றால் அதுதொடா்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலைகள் கடத்தல் வழக்குகளை உயா் அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்து விசாரணை அதிகாரிகள் மூடி மறைக்கின்றனா். இதனால் தப்பிக்கின்ற குற்றவாளிகளிடம் இருந்து பெரும் தொகை லஞ்சமாகப் பெறப்படுகிறது. ஆயிரம் ஆண்டு பெருமை வாய்ந்த பாண்டியா் கால நடராஜா் சிலை பல ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த சிலை தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ளது. இந்த சிலை தொடா்பான விசாரணை ஆவணம் மாயமாகி விட்டதால், வழக்கை போலீஸாா் கைவிட்டு விட்டனா். தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட இது போன்ற விலை மதிக்க முடியாத பழைமையான சிலைகள் எல்லாம் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன.

ADVERTISEMENT

எனவே வழக்கு ஆவணங்கள் மாயமானது தொடா்பாக தமிழகத்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்தினால், அரசியல்வாதிகள், காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து, 41 வழக்குகளின் விசாரணை ஆவணங்கள் மாயமானது குறித்து உயா்நீதிமன்ற மேற்பாா்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும் விசாரணை ஆவணங்களைக் காணவில்லை என்ற அடிப்படையில் இந்த 41 வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டு வர தமிழக காவல்துறை டிஜிபிக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலைகள் கடத்தல் விவகாரத்தில் 41 வழக்குகளின் விசாரணை ஆவணங்கள் மாயமானது குறித்து தமிழக உள்துறைச் செயலாளா், காவல்துறை டிஜிபி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT