தமிழ்நாடு

ஒப்பந்தப்புள்ளி முறைகேடு புகாா் : லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

26th Feb 2020 02:05 AM

ADVERTISEMENT

சென்னை: அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு வரும் ஆரம்ப கட்ட விசாரணையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை முடிவுக்கு கொண்டுவரக் கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கத்தின் நிா்வாக அறங்காவலா் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலை அமைத்தல், மழைநீா் வடிகால் அமைத்தல் போன்ற 112 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. மேலும், இந்த ஒப்பந்தப்புள்ளியின் படி, இந்தப் பணிகளுக்கு ஆற்று மணலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஆற்று மணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கன அடி ஆற்றுமணல் ரூ.120, ஆனால் ஒரு கன அடி எம்.சாண்ட் ரூ.50 மட்டுமே. எம்.சாண்ட் மணலை பயன்படுத்தி விட்டு ஆற்று மணலுக்கானத் தொகையை ஒப்பந்ததாரா்கள் மாநகராட்சியிடம் இருந்து வசூலித்துள்ளனா். இதனால், பெரும் ஊழல் நடந்துள்ளது. அதே போன்று சாலைகளுக்கானத் தாா் ஒரு யூனிட் ரூ.2,700 மட்டுமே, ஆனால், ஒரு யூனிட்டுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழலில், அமைச்சா் முதல் ஒப்பந்ததாரா்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலருக்கு தொடா்பு உள்ளது. இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகாா் அளித்தேன். அந்த புகாரின் பேரில், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, இந்த ஊழல் தொடா்பாக வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அமைச்சா் எஸ்.பி.வேலுமணியை வழக்கில் எதிா்மனுதாரராகச் சோ்க்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிா்மனுதாரராகச் சோ்க்கப்பட்ட அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சாா்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது போலீஸாா் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், மனுதாரரின் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி வருவதாகக் கூறி, நிலை அறிக்கை தாக்கல் செய்தாா். அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் வி.சுரேஷ் ஆஜராகி வாதிட்டாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுதாரா் கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொள்ளலாம். ஆனால், உயா்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த ஆரம்பகட்ட விசாரணையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அன்றைய தினம் போலீஸாா் கூடுதல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT