தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர பூஜை

25th Feb 2020 01:57 PM

ADVERTISEMENT

 

செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று குபேர பெருமானை வழிபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் அமைந்துள்ளது காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில். இக்கோயிலில், சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.

இத்தலத்தில், ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று யாக வேள்வி நடைபெறும். அதன்படி, மாசி மாத குபேர யாக வேள்வி பூஜை இன்று நடைபெற்றது. இதையொட்டி, கணபதி பூஜையோடு, குபேர யாக வேள்வி தொடங்கியது. பின்னர், 96 வகை மூலிகைப் பொருள்கள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு திரவ்யாஹூதியும், பூர்னாஹூதியும் நடைபெற்றது.

ADVERTISEMENT

தொடர்ந்து, சித்திர லேகா சமேத குபேர பெருமானுக்கு பால், அரிசி மாவு, திரவியம், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்பு பூஜைகளும், அபிஷேக, அலங்கார தீபாரதனைகளும் நடைபெற்றன.

இந்த குபேர யாக வேள்வியில் பங்கேற்பதன் மூமாக, கடன் தொல்லைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT